சுஜாதா: தமிழ் சமூகத்திற்கும் அறிவுலகத்திற்கும் பேரிழப்பு

மார்ச் 4, 2008

sujathaசுஜாதா தமிழ் எழுத்துலகம் கொண்டாடத்தக்க மிகப்பெரும் சாதனைகளையும் முன்முயற்சிகளையும் செய்தவர். அவருக்குப் பிந்தைய எழுத்தாளர்கள் பலருக்கும் அவரே முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர். தமிழில் துப்பறியும் நாவல்களும், அறிவியல் புனை கதைகளும், அறிவியல் கட்டுரைகளும் அதிக அளவில் எழுதப்பட்டதற்கு சுஜாதாதான் காரணம் என்று கூறலாம். எண்ணங்களைச் சொல்வதில் சமர்த்தர். அவர் எழுதிய பாமரருக்கும் படித்தவருக்கும் கணிப்பொறி, தலைமை செயலகம், கற்றதும் பெற்றதும் போன்றவை நமக்கு அறிவியலையும் பொது அறிவையும் வளர்க்க பெரும் உதவி புரிந்தன என்றால் மிகையல்ல. இது ஏதோ ஒரு மனிதருக்கான வழக்கமான புகழஞ்சலியல்ல. அவருடைய எழுத்துக்களை படிததவன் என்ற முறையிலும் இன்னும் படித்துக்கொண்டிருப்பவன் என்பதாலும் இதை என்னால் நிச்சயமாக கூறமுடியும். ஒருவருடைய அறிவு என்பது ஏதோ ஒரு துறையில் மட்டும் ஆழ்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் விசயஞானம் உள்ளவர்கள் உலகில் வெகுக் குறைவு. அந்த குறைவான வெகு சிலரில் சுஜாதாவும் ஒருவர் எனலாம். ஒருவருடைய மறைவு என்பது உடல் மட்டுமன்று அவருடைய அறிவும் சேர்ந்தது என்பது உலகியல் உண்மை. சுஜாதா என்ற அறிவுச் சுரங்கத்தின் மறைவு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.